தோல்வியில் முடிந்த நாசாவின் முயற்சி...

by Admin / 08-08-2021 01:05:07pm
தோல்வியில் முடிந்த நாசாவின் முயற்சி...

செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் என்ற ரோவரை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

இதனையடுத்து, அங்கு உயிரினங்கள் வாழ்ந்தனவா? என்பதை ஆராய்வதற்காக அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி, தோல்வியில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெர்சவரன்ஸ் ரோவரில் துளையிடும் கருவி மற்றும் மாதிரிகளை எடுத்து சேகரிப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெர்சவரன்ஸ் ரோவர், மாதிரிகளை சேகரிக்கும் தமது முதல் முயற்சியில் தரையில் வெற்றிகரமாக துளையிட்டது.

ஆனால் அதிலிருந்து பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், பெர்சவரன்ஸ் ரோவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாசா கூறியுள்ளது.

 

Tags :

Share via