எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனைக்கு எதிர்ப்பு- 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 199 பேர் மீது வழக்கு

by Admin / 11-08-2021 01:45:46pm
எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனைக்கு எதிர்ப்பு- 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 199 பேர் மீது வழக்கு

திருவல்லிக்கேணி போலீசார் ஆதிராஜாராம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
 
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை அறிந்ததும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். ஆனாலும் அ.தி.மு.க.வினர் தடுப்புகளை தூக்கி எறிந்து விட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மகளிர் அணியினர்

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், பி.ஆர்.ஜி. அருண் குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, மகேந்திரன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்பட அ.தி.மு.கவினர் 187 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், 144 தடை உத்தரவை மீறி ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் போலீசாரிடம் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குனியமுத்தூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் கோவையில் 199 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி இருந்த எஸ்.பி.வேலுமணியிடம் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க.வினர், ஆதிராஜாராம் தலைமையில் எம்.எல்.ஏ. விடுதி முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனால் ஆதிராஜாராமும், அவருடன் வந்திருந்த அ.தி.மு.க.வினரும் உள்ளே நுழைய முயன்று போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் ஆதிராஜாராம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் ஊரடங்கு தடையை மீறி கும்பலாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via