மதுரை எய்ம்ஸ் பணிகளை 36 மாதங்களுக்குள்  மத்திய அரசு முடிக்கும்: மதுரைக்கிளை 

by Editor / 17-08-2021 04:18:29pm
 மதுரை எய்ம்ஸ் பணிகளை 36 மாதங்களுக்குள்  மத்திய அரசு முடிக்கும்: மதுரைக்கிளை 


மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் மத்திய அரசு முழுமையாக முடிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கையைத் தொடங்க வலியுறுத்திய பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணையில் இருந்து வருகிறது.இந்நிலையில்  நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிக்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை.
மனுதாரர் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திராமல், எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


36 மாதங்களுக்குள்ளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்து மத்திய அரசு இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via