4 மாத இடைவெளிக்குப் பின் சென்னையில் 3 தியேட்டர்கள் மட்டுமே இன்று திறப்பு

by Editor / 23-08-2021 05:10:52pm
4 மாத இடைவெளிக்குப் பின் சென்னையில் 3 தியேட்டர்கள் மட்டுமே இன்று திறப்பு

4 மாதங்களுக்கு பிறகு சென்னை நகரில் மூன்றே மூன்று தியேட்டர்கள் மட்டுமே இன்று திறக்கப்பட்டன. 3 தியேட்டர்களிலும் ஏற்கனவே கைவசமிருந்த படங்களை திரையிட்டனர். கணிசமான அளவுக்கு ரசிகர்கள் வந்திருந்தனர். நகரிலும் சரி, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வியாழன், வெள்ளிக்கிழமையன்றே எல்லா தியேட்டர்களும் வழக்கம்போல் திறக்கப்படும் தியேட்டர் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து (செப்டம்பர் 6-ம் தேதி வரை) தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு சில தியேட்டர்களே தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன.

கமலா சினிமாஸ்

வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி இன்று திறக்கப்பட்டது. இங்கு 2 தியேட்டர்கள் உள்ளன.

ஸ்கிரீன் 1ல் காமெடி நடிகர் சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படமும், ஸ்கிரீன் 2ல் ‘காட்சிலா’ ஆங்கிலப் படமும் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் காட்சியில் ஸ்கிரீன் 1ல் 50 ரசிகர்கள், ஸ்கிரீன் 2ல் 40 ரசிகர்கள் படம் பார்த்தனர். நீண்ட இடைவெளியில் திறக்கிறோமே..., ரசிகர்கள் வருகை அதுவும் புதிய ரிலீஸ் இல்லாத சூழ்நிலையில் எப்படி இருக்குமோ என்று ஒரு பதட்டத்தில் இருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சற்று கூடுதலாகவே (ஏற்கனவே ஓடிய படம் என்றாலும்) வந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல இன்னும் 2, 3 நாட்களில் மற்ற தியேட்டர்களும் திறந்து, புதிய படங்கள் திரையிடப்படுகிறபோது ரசிகர்கள் மெல்லமெல்ல வர ஆரம்பித்துவிடுவார்கள்.

இளைஞர்களுக்கு சினிமா பொழுதுபோக்கு என்றிருக்கும்போது தியேட்டர்களுக்கு கூட்டம் வராமல் இருக்காது என்று தியேட்டர் நிர்வாகி விஷ்ணு கமல் (அதிபர்களில் ஒருவரான கணேஷின் மகன்) கூறினார்.

கமலாவைப் போல ஏஜீஸ், சங்கம் தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. இங்கும் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் வந்திருந்தனர்.

தேவி குரூப்

அண்ணாசாலையில் பிரபலமான தேவி குரூப் தியேட்டர்கள் (தேவி, தேவி பாரடைஸ், தேவி...) எதுவும் இன்று திறக்கப்படவில்லை. இதேபோல மல்டி பிளக்ஸ் திரையரங்குகளும் திறக்கப்படவில்லை என்று ஒரு திரையரங்கின் நிர்வாகி தெரிவித்தார்.

 

Tags :

Share via