என்னை ஏமாற்றி விட்டார்: பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் விமல் புகார்!

by Admin / 27-08-2021 01:00:43pm
என்னை ஏமாற்றி விட்டார்: பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் விமல் புகார்!

நடிகர் விமல் அளித்த புகாரில் சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  
 
பசங்க 2, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை விருகம்பாக்கத்தில் தயாரிப்பாளரும், பைனான்சியருமான சிங்காரவேலன் உள்ளிட்ட மூவர் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்

. அந்த புகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கி வெளிவந்த மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார். பணப் பிரச்சனை காரணமாக அந்தப் படத்தை தனது A3v தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களை நம்பி பல காசோலைகளிலும் ஆவணங்களிலும், கையெழுத்திட்டதாகவும், இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 அந்த நான்கு கோடி ரூபாய் பணமும், படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்காக செலவாகி விட்டதாக சிங்காரவேலன் தெரிவித்ததாகவும், அசல் 3 கோடி ரூபாய் பணத்துக்காக எதிர்வரும் காலத்தில்  படங்கள் நடித்து  சம்பளத்தின் மூலம் தான் கொடுத்தாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் மன்னர் வகையறா படம் விற்பனை செய்ததில் சேட்டிலைட் உரிமை மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை மூலம் 8 கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் தன்னை பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் மோசடி செய்துள்ளதை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்களிலும் மற்றும் காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்ததாகவும் அவர்கள் மூவர் மீதும் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.


 


மேலும், இவர்களால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளாதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள நடிகர் விமல் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் நடிகர் விமல் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது சென்னை விருகம்பாக்கம் போலீசார் சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன், கோபி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவர் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளரான சிங்காரவேலன் நடிகர் விமல் மீது இரண்டே கால் கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டு பணத்தை திருப்பி தரவில்லை என புகார் அளித்திருந்தார். அதன் பின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் களவாணி 2 படத்தை வெளியிட விடாமல் தன்னை மிரட்டுவதாக இயக்குனர் சற்குணம்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via