மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்... காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம்... அமெரிக்க அதிபர் ஆவேசம்...

by Admin / 27-08-2021 03:16:18pm
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்... காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம்... அமெரிக்க அதிபர் ஆவேசம்...

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
 
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்பு படையைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் என கூறியுள்ளார்.

காபூல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம் என்றும், பதிலடி கொடுப்போம் எனவும் ஆவேசமாக பேசியுள்ள அவர், ஆப்கானிஸ்மானில் மீட்பு பணிகளை நிறுத்தப் போவதில்லை என்றும், தொடர்ந்து செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

காபூல் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற ஒருபோதும் அனுமதித்திருக்க கூடாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தை பைடன் நிர்வாகம் கையாள்வதையும் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

இதைப்போல காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை, இன்றைய தாக்குதல் வலுப்படுத்துவதாக கூறியுள்ளது.

இதைப்போல நேட்டோ அமைப்பின் தலைவா் ஜென்ஸ் ஸ்டோல்டென்பொ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.
 
இதில் பாதிக்கப்பட்டவா்களை நினைத்து வருந்துவதாகவும், அங்குள்ள மற்றவா்களையும் விரைவாக வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.நா. சபையும், பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலையற்ற தன்மையை அடிக்கோடிட்டு காட்டுவதாக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via