காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் காலமானார்

by Editor / 02-09-2021 09:41:05am
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் காலமானார்

காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 92.நீண்டகாலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

கிலானியின் வீட்டைச் சுற்றி இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கிலானி மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்றும், இணைய சேவை துண்டிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஹூரியத் மாநாடு அமைப்பைத் தொடங்கியவர்களுள் ஒருவர் கிலானி. இப்போது அந்த இயக்கம் முடங்கியிருக்கிறது.கிலானியின் மரணத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். "பல்வேறு அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் மீது பெரிதும் மரியாதை வைத்திருந்தேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருக்கிறார்.

கிலானியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே உள்ளூர் மக்கள் அனைவரும் கிலானியின் வீட்டுக்கு அருகேயுள்ள மசூதி அருகே வருமாறு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டு வருவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது எனினும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி காவல்துறை வலியுறுத்தியுள்ளது. ராணுவத்தின் கவச வாகனங்கள் தெருக்களில் சென்று கொண்டிருக்கின்றன.

 

Tags :

Share via