30 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

by Editor / 03-09-2021 03:33:31pm
30 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

 

தமிழக அரசின் காப்பீடு திட்டம் மூலம் 30 ஆயிரம் கொரோனா நோயாளி களுக்கு ரூ.379 கோடி சிகிச்சை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது:-

கொரோனா பாதிப்பில் என் அன்பு மகனை நான் இழந்திருக்கிறேன். தினமும் 3 மணி நேரமாவது அவனை நினைத்து வேதனைப்படுவதுண்டு. தமிழகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திலும் இதே வேதனை இருக்கும்.

எனவேதான் ஆட்சி பொறுப்பேற்ற வுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக ஈடுபட்டார். கடந்த ஆட்சி காலத்தில் 103 நாளில் 63 லட்சத்து 28 ஆயிரத்து 407 பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டது. தமிழகம் 9-வது இடத்தில் இருந்தது.

தற்போது தினமும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 777 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி, கடந்த ஆட்சியில் தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்தது. 4 சதவீதம் அளவுக்கு வீணடிக்கப்பட்டது.

ஆனால், இப்போது மாநிலங்களவை யில், தடுப்பூசி மருந்தை கூடுதலான நபர்களுக்கு செலுத்திவரும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை மத்திய அரசிடம் இருந்து 3 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 230 டோஸ்கள் தடுப்பூசி மருந்து வந்துள்ளது. இதில், 3 கோடியே 11 லட்சத்து 6 ஆயிரத்து 218 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 117 நாட்களில், 2 கோடியே 69 லட்சத்து 16 ஆயிரத்து 316 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

80 ஆயிரம் படுக்கைகள் தயார்

கொரோனா தடுப்பூசி மாநில அரசுக்கு 75 சதவீதமும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 25 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி மருந்துகளில் 10 சதவீதம் அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் இருப்பு உள்ளது. தற்போது, சி.எஸ்.ஆர். நிதி (சமூக பங்களிப்பு நிதி) மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. 3-வது அலையில் இருந்து காக்க தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 80 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3 மாத காலத்திற்கு தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.

இதுவரை, 408 கிராம ஊராட்சி களிலும், 4 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ‘நியூமோ கோக்கல் கான்ஜூகேட்' என்ற தடுப்பூசியை போட மத்திய அரசு கூறியது. ஆனால், கடந்த கால ஆட்சியில் அது போடப்படவில்லை.

தனியார் ஆஸ்பத்திரிகளில் 3 டோஸ் போடவேண்டும் என்றால், ரூ.12 ஆயிரம் செலவாகும். கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி தமிழக அரசால் இந்த திட்டம் பூந்தமல்லியில் தொடங்கப்பட்டு இதுவரை 55 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 7-.5-.2021 முதல் நேற்று இரவு வரை கொரோனா சிகிச்சைக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் 30 ஆயிரத்து 223 பேர் பயன்பெற்றுள்ளனர். இதற்காக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு ரூ.379 கோடியே 11 லட்சத்தை வழங்கியுள்ளது.

ரூ.42 கோடி மிச்சம்

கடந்த ஆட்சி காலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு உணவு வழங்கியதற்கு ரூ.600, ரூ.550, ரூ.500 என்று பில் போட்டுள்ளனர். தற்போது, மிகச்சிறந்த உணவகங்களில் இருந்து சரியான விலையில் உணவு வாங்கி வழங்கப்படுகிறது. இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. இதுவரை உணவு மூலம் அரசுக்கு ரூ.36 கோடியே 90 லட்சம் மிச்சம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஆட்சியில் 3 அடுக்கு முககவசம் ரூ.9.80 விலையில் வாங்கப்பட்டுள்ளது. தற்போது, 85 காசு முதல் ரூ.1.15 வரையிலான விலையில் வாங்கப்படுகிறது. இதன்மூலம் 75 லட்சம் முககவசங்கள் வாங்கப்பட்டதில் அரசுக்கு ரூ.6 கோடியே 48 லட்சம் மிச்சம் ஏற்பட்டுள்ளது.

என்-95 முககவசம் கடந்த ஆட்சியில் ரூ.14.40 விலையில் வாங்கப்பட்டது. தற்போது, ரூ.6.95 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.2.32 கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பி.பி. கிட் கவச உடை, கடந்த ஆட்சியில் ரூ.385 விலையில் வாங்கப்பட்டது. இப்போது அதே நிறுவனத்திடம் இருந்து ரூ.139.50 விலையில் வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.33 கோடியே 36 லட்சம் மிச்சமாகியுள்ளது. மொத்தத்தில் ரூ.42 கோடியே 18 லட்சம் மிச்சமாகியுள்ளது.

பணி மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கும் டாக்டர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலந்தாய்வு முறை இருந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த முறையை பின்பற்றவில்லை. தற்போது மீண்டும் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் 6,153 பேர் பணி மாறுதல் பெற்று விரும்பிய ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

 

Tags :

Share via