கோவை சிறையில் வ.உ.சி இழுத்த செக்கிற்கு, அமைச்சர் சக்கரபாணி மரியாதை

by Editor / 05-09-2021 12:48:40pm
கோவை சிறையில் வ.உ.சி இழுத்த செக்கிற்கு, அமைச்சர் சக்கரபாணி மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு அமைச்சர் சக்கரபாணி, பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறையில் இருந்தபோது அவர் இழுத்த செக்கிற்கும், அவரது உருவ படத்திற்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி பேருந்தினை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்து, கோவையில் உள்ள அரசுப்பள்ளி, கல்லூரிகளுக்கு இனி வரும் நாட்களில் செல்ல உள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, வ.உ.சிதம்பரனாரின் அருமைகளை போற்றும் விதமாக ஒரு வருடத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கோவையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கோவை நஞ்சப்பா சாலைக்கு வ.உ.சிதம்பரனாரின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், கோவையில் உள்ள ஏதாவது ஒரு மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென, சிதம்பரனார் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதல் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி பின்பற்ற வேண்டும், என அவர் கூறினார். 

 

Tags :

Share via