நேபாளத்தில் கடும் மழை; 380 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

by Editor / 06-09-2021 06:09:33pm
நேபாளத்தில் கடும் மழை; 380 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

நேபாளம் தலைநகர் காத்மண்ட்டில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 380 வீடுகள் நீரில் மூழ்கின. 138 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேபாளம் தலைநகர் காத்மண்ட் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக 100 நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின. காத்மண்டில் 4 மணி நேரத்தில் 105 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேபாள போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ராணுவப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு 138க்கும் மேற்பட்டவர்களை மீட்டதாக மாநகர போலீஸ் செய்தி தொடர்பு அதிகாரி சுசில் சிங் ரத்தோர் தெரிவித்தார். மனோகரா நதி கரையில் உள்ள முன்பானி, கடாகரை, தெகு மற்றும் பல்கு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றது என்றும் ரத்தோர் கூறினார்.

டாங்கேஷ்வொர், டல்லு, தெகு, தச்சால், பால்கு, நயா புஸ்பார்க், பீம்சென்ஸ்தன், மச்சா போகாரி, சபாஹில், ஜோர்பதி மற்றும் கலோபுல் ஆகிய இடங்களில் மொத்தம் 382 வீடுகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஒகலதுங்கா மாவட்டத்தில் உள்ள பெடினி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்ட வீடுகள் மின்னல் தாக்கியதில் சேதமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via