பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் - தமிழக அரசு

by Editor / 15-09-2021 03:57:10pm
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் - தமிழக அரசு

இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம்.

சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி பெறலாம் . திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையைத் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால் இந்த திட்டத்தில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி, வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதனால், பெற்றோர்களும், நீண்டகால முதலீட்டை விரும்புபவர்களும் இந்த திட்டத்தை சிறந்த முதலீட்டு திட்டமாக தேர்வு செய்தனர்.

செல்வமகள் திட்டத்தில் 7.6 விழுக்காடு வட்டி கொடுக்கப்படுகிறது. முதிர்வு காலமான 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் சேமிப்பு தொகையில் இருந்து 3 மடங்கு தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் சென்று அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் மகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கிக்கொள்ளலாம்.

 

Tags :

Share via