பஞ்சாபில் அடுத்த முதல்வர் யார்? காங்கிரஸ் கட்சியில் ‘திடீர்’ குழப்பம்

by Editor / 19-09-2021 05:35:32pm
பஞ்சாபில் அடுத்த முதல்வர் யார்? காங்கிரஸ் கட்சியில் ‘திடீர்’ குழப்பம்

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது.

முதல்வர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத்சிங், சுகிந்தர் சிங், சுனில் ஜக்ககார் பிரதாப்சிங், ரவ்னித்சிங் பிட்டு ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி அம்பிகாசோனி இன்று அவசரமாக அழைக்கப்பட்டார். ராகுலுடனான சந்திப்பு சில மணி நேரம் இருந்தது.

ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் அம்பிகா சோனி; சீக்கியர் அல்லாத முதல் மந்திரி என்றால் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அதனால், தனது பெயரை முதல் மந்திரி பதவிக்கு முன்மொழிய வேண்டாம் என்று அம்பிகா சோனி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணியது. இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் நீடித்தது. இந்நிலையில், அமரிந்தர் சிங்கை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று 50- க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.இது தொடர்பாக கட்சித்தலைவர் சோனியாவுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அவர்கள் அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தனர். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு சண்டிகாரில் உள்ள காங்கிரஸ் பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலிட பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் அஜய் மக்கானும், ஹரிஷ் ராவத்தும் சண்டிகார் விரைந்தனர்.

117 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நி-லையில், அவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அமரிந்தர் சிங் பதவி பறிப்பு நிச்சயம் என்ற நிலை உருவானது.

அதிலும் ஒரு திருப்பமாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி அமரிந்தர் சிங், தான் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மாலை 4.35 மணியளவில் அவர் மனைவி பிரனீத் கவுர் எம்.பி., மகன் ரணீந்தர் சிங் உள்பட ஆதரவாளர்களுடன் கவர்னர் மாளிகைக்கு விரைந்தார். கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மந்திரிசபையின் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் மத்தியில் அமரிந்தர் சிங் பேசினார். அப்போது அவர், ‘‘நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனது எதிர்கால அரசியலைப் பொறுத்தமட்டில், எப்போதுமே தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நேரம் வரும்போது அதை நான் பயன்படுத்துவேன். எனது ஆதரவாளர்களுடன் பேசி, இதில் நான் முடிவு எடுப்பேன்’’ என்றார்.

 

Tags :

Share via