ரூ.18.9 லட்சத்துக்கு ஏலம் போன ஐதராபாத் லட்டு

by Editor / 22-09-2021 08:01:42pm
ரூ.18.9 லட்சத்துக்கு ஏலம் போன ஐதராபாத் லட்டு

 

ஹைதராபாத்தை அடுத்துள்ள பாலாபூரிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கு ஒரு ஸ்வீட்டான சிறப்பிருக்கிறது. அதுவொரு லட்டு. இந்த ஆலயத்தில் வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளில், பிரசாதமாக 21 கிலோவில் லட்டு செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம். பின்னர், அந்த லட்டு ஏலம் விடப்படும்.

அந்தப் பகுதி மக்களுக்கு இந்த லட்டு பிரசாதத்தைச் சாப்பிட்டால் வளமாக வாழலாம் என்ற நம்பிக்கையிருப்பதால், இந்த லட்டை ஏலம் எடுப்பதற்குப் பக்தர்கள் போட்டிபோடுவார்கள். கொரோனா தொற்று காரணமாகச் சென்ற வருடம் லட்டு ஏலம் நடைபெறாத நிலையில், இந்த வருடம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.ஏலத்தின் ஆரம்ப விலை 1,116 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஏலம் எடுக்க வந்திருந்த பலரும் நான், நீ எனப் போட்டிபோட்டு ஏலம் கேட்க, அந்த 21 கிலோ லட்டு பிரசாதம் கடைசியில் 18.9 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.சி ரமேஷ் யாதவ் மற்றும் அவரின் ஆதரவாளர் மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் இந்த ஏலத்தை எடுத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த ஏலம் நடைபெறவில்லை என்றாலும், வழக்கம்போல லட்டு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவிடம் வழங்கப்பட்டது. இந்த வருடம் லட்டை ஏலம் எடுத்தவர்கள், இதை இப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வழங்கியிருக்கிறார்கள். 2019-ல் 17.6 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன இந்த லட்டு, 2018-ல், 16.6 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது

 

Tags :

Share via