தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு.. ராமதாஸ் வேண்டுகோள்

by Editor / 23-09-2021 04:29:00pm
தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு.. ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் ஆங்கில வழியில் பயின்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதைவிட தமிழர்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள அறிக்கையில் , நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையானது எந்த அளவிற்கு குறைந்து இருக்கிறது என்பதை பற்றி புள்ளி விவரங்கள் நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகியுள்ள தகவல்கள் ஆகும். தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றது. நீட் தேர்வு தான் மருத்துவ படிப்பில் சேரும் தமிழ் வழி மாணவர்களின் எண்ணிக்கையை குறைந்ததற்கான காரணம், மேலும் இதை விட முக்கியமான காரணம் தமிழ்நாட்டில் 40 வருடமாக திணிக்கப்படும் ஆங்கில வழிக் கல்வியும் தான். எனவே தமிழ் வழியில் பயிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இது அரசின் கடமையாகும்.

மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதுதான் இவற்றிற்கான தீர்வு ஆகும். அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% இட ஒதுக்கீட்டை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதனை நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு உடனடியாக அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும். வருங்காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via