பெகாசஸ் உளவு குற்றச்சாட்டை விசாரிக்க நிபுணர் குழு - உச்ச நீதிமன்றம்

by Editor / 24-09-2021 11:23:35am
பெகாசஸ் உளவு குற்றச்சாட்டை விசாரிக்க நிபுணர் குழு - உச்ச நீதிமன்றம்

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.

அத்துடன், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால், அக்குழு முன் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது குறித்து தெரிவிக்க தயார் எனவும் மத்திய அரசு கூறியது. அதைத் தொடர்ந்து, பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். விசாரணைக் குழுவில் இடம் பெற தனிப்பட்ட காரணங்களால் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், எனவே குழு உறுப்பினர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து அடுத்த வாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

 

Tags :

Share via