புத்தகமான எஸ்பிபி.,யின் இசை வாழ்க்கை

by Editor / 25-09-2021 10:30:15am
புத்தகமான எஸ்பிபி.,யின் இசை வாழ்க்கை

இந்திய இசை ஜாம்பவான்களில் முக்கிய இடம்பிடித்த எஸ்பிபி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருக்கு தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அப்படி கேரளாவில் எஸ்பிபி.,யின் தீவிர ரசிகரான எழுத்தாளர் கே.பி.சுதீரா, எஸ்பிபி.,யின் வாழ்க்கையை புத்தகமாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் எஸ்பிபி.,யின் முதல் நினைவு நாளான இன்று வெளியிடப்பட உள்ளது.

SPB : Pattinta Kadalazham என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த 400 பக்க புத்தகத்தை, அவருடன் பணியாற்றிய தமிழ் முக்கிய பிரபலங்களான நடிகர்கள் கமல், ரஜினி. பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, பாடகர்கள் கே.எஸ்.சித்ரா, மனோ, ஸ்ரீகுமரன் தம்பி ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர்.

இந்த புத்தகம் பற்றி எழுத்தாளர் சுதீரா கூறுகையில், எனக்கு பிடித்த பாடகர்களில் எஸ்பிபி.,யும் ஒருவர். அவருடன் போனில் தான் பேசி உள்ளேன். அவரை 10 ஆண்டுகளுக்கு மேல் தெரியும். ஆனால் ஒருமுறை கூட அவரை சந்தித்தது கிடையாது. கடந்த ஆண்டு அவர் உயிரிழந்ததும், அவரை பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன். இந்த புத்தகத்தை எழுத கடந்த 11 மாதங்களாக பணியாற்றி வருகிறேன்.

இந்த புத்தகத்திற்காக நான் கேட்ட போது, எஸ்பிபி.,யின் நண்பர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் என அனைவரும் சந்தோஷமாக அவரின் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.கமல், ரஜினி, வைரமுத்து, சித்ரா போன்றவர்கள் என்னுடன் போனில் பேசவும் ஓகே சொன்னார்கள்.

அப்படி ஒரு அன்பான மனிதரை நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் அது நடக்காது. கொரோனா பெருந்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. எஸ்பிபி.,யின் நெருங்கிய நண்பர் ஜி.வி.முரளி தான் இந்த புத்தகத்தை எழுத எனக்கு உதவினார்.

அனைவருக்கும் தெரியும் எஸ்பிபி பல மொழிகளில் பாடி உள்ளார் என்று. அவருடடைய குரலுக்கு பல நடிகர்கள் வாய் அசைத்து நடித்துள்ளனர். அவர்களில் கமலும் ஒருவர். ஆனால் கமல் பேசும் போது, தனக்கு இருந்த பிஸியான வேலைகளில் எஸ்பிபி எவ்வாறு தனது தெலுங்கு மொழி டப் படங்களுக்கு மொழிமாற்றம் செய்தார் என்பதையும் பகிர்ந்தார்.

சித்ரா, எஸ்பிபி உடனான நினைவலைகளை பகிர்ந்த போது, மேடையில் அவருடன் பாடிய அனுபவங்கள், எஸ்பிபி.,யின் மனிதநேயம், கனிவு, நகைச்சவை உணர்வு, கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதற்கு முன் மேடை கச்சேரி கான்டிராக்ட் தொடர்பாக தன்னுடன் பேசியது ஆகியவற்றையும் பகிர்ந்தார் என்றார்.

 

Tags :

Share via