போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட  மாநிலங்களவை உறுப்பினர்கள்

by Editor / 27-09-2021 05:05:09pm
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட  மாநிலங்களவை உறுப்பினர்கள்

 

 மாநிலங்களவை உறுப்பினர்களான கேபி முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகினர். இந்த காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


திமுக சார்பில் கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் சுயேட்சை வேட்பாளர்களான அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 
 வேட்புமனுக்கள் கூர்ந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் செய்திக்குறிப்பு வெளியிட்டார்.இதில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்புமனுக்கள் செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது. சுயேட்சை வேட்பாளர்கள் மூவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


வைத்திலிங்கத்தின் இடத்துக்கு ராஜேஷ் குமாரும், கேபி முனுசாமியின் இடத்துக்கு கனிமொழி சோமுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூனிலும், கேபி முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் நிறைவடைகிறது. இந்நிலையில், இதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலர் சீனிவாசான் வழங்கினார்.


இதேபோல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக செல்வ கணபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரான கோகுல கிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவரது இடத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வ கணபதியை பாஜக தலைமை அறிவித்தது. இதையடுத்து அவரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via