விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்திய இணை அமைச்சர் மகன் மீது  கொலை வழக்கு

by Editor / 04-10-2021 04:28:26pm
விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்திய இணை அமைச்சர் மகன் மீது  கொலை வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


உத்தர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்துக்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாரதீய ஜனதாவினர் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கி கல்வீச்சு நடைபெற்றதாக கூறப்படுகிறது.


மேலும் அந்த பகுதியில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர். அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை சேதப்படுத்தியதாகவும், காரை தீயிட்டும் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் லக்கிம்பூரில் வன்முறை வெடித்தது. போலீசார் கூட்டத்தை தடியடி நடத்திக் கலைத்தனர். வன்முறை களமாக மாறிய லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் பலியானார்கள். வன்முறையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் ஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "சம்பவ இடத்தில் எனது மகன் இல்லவே இல்லை. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார். எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன். சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான விடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


லக்கிம்பூர் வன்முறை குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இது போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் ஈடுபாடு கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூருக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

லக்கிம்பூர் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via