ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் ரத்து

by Editor / 10-10-2021 04:45:39pm
ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் ரத்து

ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 6 ந்தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.

ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2ம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2ம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து நேற்று மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலைரெயில் இயக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் இன்று கல்லார் அடர்லி இடையே மண் சரிவு மீண்டும் ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் ஊட்டி ரெயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த மலை ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கிய நிலையில் மண் சரிவு காரணமாக ரெயில் சேவை இன்று மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via