5–வது மெகா தடுப்பூசி முகாம்

by Editor / 10-10-2021 04:48:22pm
5–வது மெகா தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பல்வேறு முக்கிய சந்திப்புகளிலும் சுகாதார பணியாளர்கள் சிறிய மேஜையை போட்டுக் கொண்டு தடுப்பூசி போடுவதற்காக அமர்ந்து இருந்தார்கள்.

தடுப்பூசி போடும் இடங்களில் சாமியானா பந்தல்களை அமைத்து, விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர்.

சென்னையில் மட்டும் 1,800 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமில் இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவர்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிண்டி மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். இதேபோன்று சைதாப்பேட்டை கின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் துவக்க பள்ளியில் உள்ள முகாமுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று ஆய்வு நடத்தினார்.

அங்கு ஊசி போட வந்தவர்களிடம் முதலாவது ஊசியா அல்லது இரண்டாம் தவணை ஊசி போடுகிறீர்களா என்று முதலமைச்சர் கேட்டார்.

சிரமம் இல்லாமல் ஊசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.சென்னையில் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு முடுக்கி விட்டனர்.

ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இதுவரை இல்லாத அளவில் இன்று 32,017 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது. தற்போதுவரை மொத்தமாக 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் அரசு மூலம் 4.78 டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. அதில் 3.74 கோடி முதல் தவணை தடுப்பூசியும். 1.29 கோடி இரண்டாவது தடுப்பூசியும் அடங்கும். சுகாதாரத்துறையிடம் 6.08 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்று மதியம் மேலும் 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வருகிறது. 2வது தவணை செலுத்த வேண்டிய காலம் கடந்தும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தாமல் 20 லட்சம் பேரும், கோவாக்சின் தடுப்பூசி 2வது தவணை செலுத்தாமல் 6.85 லட்சம் பேரும் உள்ளனர். அவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

325 பேருக்கு டெங்குஅடுத்து வரும் 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பில் இருந்து மக்கள் தற்காத்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களது வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்காமல் கண்காணித்து கொள்ள வேண்டும். தற்போது வரை 325 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் மாவட்டந்தோறும் டெங்கு காய்ச்சல் உறுதியாகிறது. டெங்கு பாதிப்பால் இந்த ஆண்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி 5ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாமை நேரில் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via