21 வயது பெண் பொறியாளர் ஊராட்சித் தலைவரானார்

by Editor / 13-10-2021 10:10:38am
21 வயது பெண் பொறியாளர் ஊராட்சித் தலைவரானார்

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 21 வயது பெண் வேட்பாளரான சாருலதா வெற்றிபெற்று இளம் வயதில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் பெற்று உள்ளார்.

லெட்சுமியூர் கிராமத்தை சேர்ந்த ரவி சுப்பிரமணியன் (54) என்ற தொழிலதிபரின் மகள் சாருலதா. இவரது தாய் சாந்தி (50) பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாருலதா, தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவே உடனடியாக முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

கிராமபுறமே இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தி கூறி இருப்பதால், கிராமபுறங்கள் மற்றும் கிராம மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே தனக்கு மேலோங்கி இருந்ததால் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவியில் போட்டியிட முடிவு செய்ததாக சாருலதா தெரிவித்து உள்ளார்.

வெங்கடாம்பட்டி கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்ன் என்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் எனவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தருவேன் எனவும் மக்களிடம் வாக்குறுதி அளித்து உள்ளார் சாருலதா. பொறியியல் படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும், ஆன் சைட்டில் வெளிநாடு சென்று பணியாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இன்றைய இளம் தலைமுறைக்கு மத்தியில் சாருலதா புதுமை பெண்ணாக திகழ்கிறார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 93 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று உள்ளது. அதிமுக கூட்டணி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிவாகை சூடியுள்ளது. அதே சமயம், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 222 இடங்களை தி.மு.க. கூட்டணி வென்றுள்ளது. 35 இடங்களில் அதிமுகவும், மற்றவை 21 இடங்களில் வெற்றிபெற்று உள்ளன.

 

Tags :

Share via