(இன்று நினைவு நாள் ) சமூக சீர்திருத்த எழுத்தாளர் நெல்லை அ. மாதவையர்

by Editor / 21-10-2021 04:45:48pm
(இன்று நினைவு நாள் ) சமூக சீர்திருத்த எழுத்தாளர் நெல்லை அ. மாதவையர்

 

அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (மறைவு- அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.அ. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்..தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார்.

தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892-இல் முதல் மாணவராக முடித்தார்.பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா  நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார்.


மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.


1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையர் மரணமடைந்தார்.அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை வெளியிட்டார்.


சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.


அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, மா. அனந்த நாராயணன், மீனாட்சி தியாகராஜன், மா. கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலட்சுமி, விசாலாட்சி, டாக்டர் சரசுவதி உட்டபட ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவரின் அண்ணன் மகன்.

 

Tags :

Share via