நெல்லை பெண்ணிடம் ரூ.4.5 கோடி பணம் மோசடி

by Editor / 23-10-2021 04:02:28pm
நெல்லை பெண்ணிடம் ரூ.4.5 கோடி பணம் மோசடி

 

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் வசந்தாபுரம் பகுதியைச்  சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவரிடம் சென்னையைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள கடைகளில்  ஆபரணத் தங்கம் ஏற்றுமதி செய்து முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.  இந்த தம்பதியரின் குடும்ப நண்பர் என்ற ரீதியில் அவர் சொல்வதை நம்பி 4 கோடியே 45 லட்சம் ரூபாயை மாரியப்பனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து  அவர்கள் கொடுத்த தங்கம் வெளிநாடுகளில் உள்ள கடையில் முதலீடு செய்யப்பட்டதாகவும், அதற்கான பணம் வங்கி கணக்கு மூலம் கிடைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒன்றரை வருடங்களை தாண்டியும் அவர்களுக்கு தங்கம் ஏற்றுமதி செய்ததற்கான எந்த பணமும் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரவில்லை கூறப்படுகிறது.


இந்த நிலையில் தங்கம் ஏற்றுமதி செய்து முதலீடு செய்து அதற்கான தொகை குறித்து மாரியப்பன் உள்ளிட்டோரிடம் கேட்டதற்கு, கொரோனா காலம் என்பதால் பணம் வரவு செலவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும்,  உலக நாடுகள் முழுவதும் இக்கட்டான சூழ்நிலையில் பணபரிவர்த்தனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக முதலீடு செய்வதற்கான எந்த பணமும் கிடைக்காத நிலையில், கிருஷ்ணகுமாரி தம்பதியினர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு கிருஷ்ணகுமாரி தம்பதியினரை அழைத்த நிலையில் மாரியப்பன் உள்ளிட்டோர் விசாரணைக்கு செல்லக் கூடாது எனவும் மீறி சென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாக கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். வெளிநாடுகளில் இயங்குவதாக போலியான நகைக்கடை பெயரைச் சொல்லி 4 கோடியே 45 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via