உலகை சுற்றிய ஒரு டீக்கடைக்காரரின் கடைசி பயணம்...

by Editor / 22-11-2021 05:53:21pm
உலகை சுற்றிய ஒரு டீக்கடைக்காரரின் கடைசி பயணம்...

ஒரு டீக்கடைக்காரரின் மரணத்துக்கு இரங்கல் கூறி, கேரள மாநில சுற்றுலாத்துறை நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. ஒரு சாதாரண டீக்கடைக்காரருக்கு சுற்றுலாத்துறை எதற்காக இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்கிறீர்களா… அங்கேதான் விஷயம் இருக்கிறது.


அவர் சாதாரண டீக்கடைக்காரர் மட்டுமல்ல, உலகை சுற்றிவந்த ஒரு மிகச்சிறந்த சுற்றுலாப் பயணியும்கூட. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வந்த அந்த டீக்கடைக்காரரின் பெயர் விஜயன் (வயது 71). எல்லோரையும் போல அவரும் மிகச் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார்.


கேரளாவின் கொச்சி நகரில், ‘ஸ்ரீ பாலாஜி காபி’ என்ற கடையை நடத்தி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் இந்த உலகை சுற்றிப் பார்க்கும் ஆசை அவருக்கு வந்துள்ளது. இந்த ஆசையை மனைவி மோகனாவிடம் கூற, அவரும் அதற்கு சம்மதித்துள்ளார். இது நடந்தது 2007-ம் ஆண்டில், அந்த ஆண்டுமுதல், கடையில் தினசரி வரும் லாபத்தில் 300 ரூபாயை பயணத்துக்காக கணவனும் மனைவியும் சேர்த்து வைப்பார்கள். ஓரளவு பணம் சேர்ந்ததும், உலகைச் சுற்றிப்பார்க்க கிளம்பிவிடுவார்கள். இப்படி முதலாவதாக எகிப்து நாட்டுக்கு பயணப்பட்ட இந்த தம்பதி, இதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில், அமெரிக்கா, ரஷ்யா உட்பட 26 நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறார்கள்.


சுற்றிப் பார்ப்பது மட்டுமின்றி, அங்கு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார் விஜயன். கேரளாவின் பிரபலங்களான சூப்பர் ஸ்டார் மோகன்லால் முதல் அமைச்சர்கள் வரை பலரும் விஜயனின் ரசிகர்களாக இருந்துள்ளனர். அவரைச் சந்தித்து பயண அனுபவங்களைக் கேட்டுள்ளனர்.


டீக்கடை வருமானத்தில் உலகைச் சுற்றிப் பார்த்த விஜயன் தம்பதி, அதற்காக டீயின் விலையை எப்போதும் உயர்த்தியதில்லை. இவர்களின் கடையில் ஒரு டீயின் விலை 5 ரூபாய்தான். மக்களுக்கு விஜயனைப் பிடித்துப் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உலகை சுற்றிப் பார்த்துவந்த விஜயன், அடுத்ததாக ஜப்பானுக்கு செல்ல தயாராகி வந்தார். இந்தச் சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள கேரள சுற்றுலாத் துறை, ‘விஜயன் தன் கடைசி பயணத்தை மேற்கொண்டார்’ என பதிவிட்டுள்ளது.

 

Tags :

Share via