திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பியதில் முறைகேடு...

by Admin / 29-12-2021 02:02:03pm
திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பியதில் முறைகேடு...

 
கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மதுரை ஆவின் நிறுவனத்தில் 2019 முதல் நடைபெற்ற பணி நியமனங்கள், பொருள்கள் கொள்முதல், தற்காலிகப் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். ஆவின் மேலாளர், அதிகாரிகள் மற்றும் கணக்கர்கள் , பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நியமனம், ஒப்பந்தம், பொருள்கள் விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
இதில் திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மோசடி புகாரில் ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து ஆவினில் நடைபெற்றுள்ள மோசடி வெளியாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via