டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் ஓடும் ரெயிலில் பயணியை பூட்ஸ் காலால் மிதித்த உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

by Admin / 04-01-2022 12:28:01pm
டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் ஓடும் ரெயிலில் பயணியை பூட்ஸ் காலால் மிதித்த உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று மதுபாட்டிலுடன் வந்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஓடும் ரெயிலில் பயணி ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் தாக்கும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வைரலானது

மாவேலி எக்ஸ்பிரஸ் ரெயிலின் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பயணியை ஆவேசமாக திட்டுகிறார். தொடர்ந்து பூட்ஸ் காலால் அவரை மிதித்து ரெயிலில் இருந்து இறங்கும்படி கூறுகிறார்.

இச்சம்பவத்தை ரெயிலில் இருந்த சில பயணிகள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அவர்கள் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

இதில் ரெயிலில் இருந்த பெண்கள் சிலர், பயணி ஒருவர் குடிபோதையில் ஆபாசமாக பேசுவதாக ரெயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கூறியதாகவும், அவர் அந்த பயணியிடம் விசாரித்தபோது பயணி, டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் கேட்டுக்கொண்டதன் பேரில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் என்பவர் அங்கு சென்று விசாரித்தார். பின்னர் அவர் பயணியை ரெயிலில் இருந்து இறக்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சைத்திரா தெரசா ஜானுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை அறிக்கை அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பயணி ஒருவரை முறையாக விசாரிக்காமல் தாக்கியது மனிதாபிமானமற்ற செயல் என கூறப்பட்டது. இதையடுத்து உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

ரெயிலில் பயணி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் கூறும்போது, கேரளாவில் நாளுக்குநாள் போலீசாரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக கூறினார்.

இதற்கிடையே கேரள மனித உரிமை கமி‌ஷனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கண்ணூர் போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட்டு உள்ளது.

   
 

 

Tags :

Share via