கொரோனா வேகமாக பரவி வருவதால் தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்த யோகி ஆதித்யநாத்

by Admin / 05-01-2022 02:01:27pm
கொரோனா வேகமாக பரவி வருவதால் தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக, நாளைய தினம் தனது தேர்தல் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இன்னும் சில மாதங்களில் உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் பரப்புரைகள் வேகமெடுத்து வருகின்றன. 

இருப்பினும், ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பரப்புரைகள் நடத்த அரசியல் கட்சிகல் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது. 

தேர்தல் பரப்புரைகளால் பரவல் மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் வல்லுநர் குழுவின் தொடர் எச்சரிக்கைகளை தொடர்ந்து, நாளைய தினம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உ.பி.யில் நொய்டா மாவட்டத்தில்தான் அதிக அளவில் கொரொனா பரவல் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அங்குதான் யோகி ஆதித்யநாத் செல்வதாக இருந்ததால், அவருக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து பரப்புரைக் கூட்டம் திட்டத்தை யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் கட்சி உ.பி.யில் மாநிலம் முழுவதும் தனது பெரிய அளவிலான பரப்புரைக் கூட்டங்கள் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via