இடஒதுக்கீடு தொடர்ந்தால் மட்டுமே ஏழைகளின் கனவு நனவாகும்-மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ள மாணவிகள் பேட்டி.

by Editor / 29-01-2022 02:40:42pm
இடஒதுக்கீடு தொடர்ந்தால்  மட்டுமே ஏழைகளின் கனவு நனவாகும்-மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ள மாணவிகள் பேட்டி.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 3,862 மையங்களில், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தமிழகத்திலுள்ள ஏராளமான அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு கல்லூரிகளில் மருத்துவ இடங்களை பெற்றனர்.

 இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 16 மாணவர்கள் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவ படிப்பிற்கான இடத்தை பெற்றனர்.

அதன்படி, தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவிகளும், சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் 3 பேரும் தென்காசி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவரும் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

 இதில், செங்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த ஆட்டோ டிரைவரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தச்சுத் தொழிலாளியின் மகள் லோகேஸ்வரி, தற்காலிக தபால் நிலைய ஊழியரின் மகள் சுபாஸ்ரீயும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பாத்திமா மற்றும் சீதாதேவி ஆகிய 5 மாணவிகள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்று, திருச்சி, ராமநாதபுரம், அரியலூர்,விருதுநகர் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிக்க தேர்வாகியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தான் எங்களது மருத்துவ கனவு நிறைவேறியதாகவும், இது தொடர்ந்தாள் மட்டுமே ஏழை மாணவர்களின் கனவு நனவாகுமென்று கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.மேலும், இந்த இட ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்போதுதான் எங்களை போல மாணவ, மாணவிகளில் மருத்துவர் கனவு நனவாகும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

 

Tags : The dream of the poor will come true only if reservation continues

Share via