உக்ரைனில் சிக்கி தவிக்கும் பொன்னேரி மாணவிகள்- மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தங்க வைப்பு

by Editor / 26-02-2022 01:42:19pm
உக்ரைனில் சிக்கி தவிக்கும் பொன்னேரி மாணவிகள்- மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தங்க வைப்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. சரமாரியாக குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த நிலையில் பொன்னேரியை சேர்ந்த 2 மாணவிகள் உக்ரைனில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரது மகள் ரித்திகா மேற்கு உக்ரைனில் மருத்துவம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.அவர் அங்கு நடந்து வரும் போர் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளார். இதேபோல் மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த மோகனப்பிரியா என்பவரும் சிக்கி உள்ளார். அவர் கீவ் நகரில் ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

தற்போது கீவ் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் உள்ளே புகுந்துள்ளன. இதனால் அங்கு கடுமையான போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக மோகனப்பிரியா வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கி உள்ளார்.இது தொடர்பாக அவர் நெய்தவாயலில் உள்ள தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறார். அப்போது மோகனப்பிரியா கூறியதாவது:-

நாங்கள் தங்கி இருக்கும் கீவ் நகரில் தற்போது கடுமையான குண்டு வீச்சு நடந்து வருகிறது. நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சில கி.மீட்டர் தூரத்தில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் குண்டு வெடிக்கும் சத்தம், ஹெலிகாப்டர், போர் விமான இரைச்சல் கேட்கிறது. இந்தியா வருவதற்கு விமான டிக்கெட் எடுத்து இருந்தோம். விமானம் ரத்து செய்யப்பட்டதால் வர முடியவில்லை.

நாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர். துணி மற்றும் தேவையான ஆவணங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்து இருக்கும் படி கூறி உள்ளனர். வெளியேற உத்தரவு கிடைத்ததும் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியே வருவோம்.

இன்னும் 2 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. தொடர்ந்து குண்டு மழை சத்தத்தால் அனைவரும் அச்சத்தில் உள்ளோம்.இன்று காலை நாங்கள் அனைவரும் தங்கியிருந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். காலை உணவு மட்டும் கொடுத்தனர். மதியத்திற்கு உணவு கிடைக்குமா? என்று தெரியவில்லை.

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் பொதுமக்களும் ஏராளமானோர் உள்ளனர். அனைவரும் தூக்கமின்றி தவித்து வருகிறோம். இருக்கும் இடத்தை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே நாங்கள் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளோம். விரைந்து எங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Tags : Ponneri students stranded in Ukraine - Gold deposit in metro rail tunnel

Share via