இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்

by Admin / 06-03-2022 05:31:51pm
இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்

பள்ளிக்கல்வித் துறை மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் மூன்று கோடிக்கும் மேல் பணத்தை ஏமாற்றிய பெண் உட்பட நான்கு நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 

இந்த புகார் மனுவில் கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக தனக்கும் தன்னைப் போன்று பல இளைஞர்களை ஏமாற்றி இருப்பதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமில்லாமல் போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றி இருப்பதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் சென்னை நன்மங்கலம் பகுதியை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்கள். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பள்ளிக்கல்வித் துறையில் ரேணுகா என்பவர் உயரதிகாரி போல போலியான அடையாள அட்டையை வைத்து தனது கூட்டாளிகளான சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த காந்தி வயது 54, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் மூன்று கோடிக்கும் மேல் பணத்தை ஏமாற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இளைஞர்களிடம் போலியான பணி நியமன ஆணையை வழங்கி அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலியான மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டுள்ளார்கள்.

பரிசோதனை முடிந்து இளைஞர்கள் தங்கள் பணிநியமண ஆணையில் உள்ள தேதியின் போது பள்ளிக்கல்வித்துறைக்கு சென்று இருக்கின்றார்கள்.
 
அதன் பிறகு தான் தெரிகிறது தங்களுக்கு வழங்கிய பணி நியமன ஆணை போலியானது என்பது. அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி புகார் மனுவை கொடுக்க சென்றுள்ளனர்.

இது போன்று வரிசையாக புகார்கள் வரவே, இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான ரேணுகா உட்பட நான்கு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி இவர்களிடமிருந்து மோசடி செயலுக்கு பயன்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட போலியான பணி நியமன ஆணைகள், இளைஞர்களின் 70க்கும் மேற்பட்ட அசல் சான்றிதழ்கள் மற்றும் மோசடி செய்த பணத்தில் இருந்து 40 லட்சத்துக்கும் மேலான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் செங்கல் சூளையில்  இருபத்தி மூன்று லட்சம்  முதலீடு செய்த சொத்து ஆவணங்கள், மொபைல் போன், ஐ பேட் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். எவ்வளவு விழிப்புணர்வு இருந்தாலும் அரசாங்க வேலை என்றவுடன் இளைஞர்கள் கண்மூடித்தனமாக நம்பி பணத்தை பறிகொடுப்பது மட்டுமல்லாமல், நிம்மதியையும் பறிகொடுத்து விடுகிறார்கள்.

வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எந்தவிதமான முறையிலும் பணத்தை வாங்குவதில்லை. அதேபோன்று வேலைக்காக முன்பின் தெரியாத நபரிடம் வங்கி கணக்குகள் மூலமாகவோ பணத்தை வழங்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை செய்து கொண்டுதான் இருக்கிறது.

 

Tags :

Share via