பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் வைகோ அறிக்கை

by Editor / 13-03-2022 10:16:39am
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்  வைகோ அறிக்கை

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கை வருமாறு:

தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார்.

அதாவது, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டம் என்ன பேசி வருகின்றதோ, தில்லி முதலாளிகள் என்ன சொல்கின்றார்களோ, அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி, அந்த மாநாட்டில் முன்வைத்து இருக்கின்றார்.

அப்படியானால், 1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடு, எங்கே இருந்தது? என்பதை அவர் விளக்க வேண்டும்.

200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு வரையிலும், இந்தியாவில் 565 சிற்றரசுகள்தான் இருந்தன என்பது வரலாறு. அதற்கு முன்பும், மொகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, தமிழ்நாடு ஒருபோதும், வட இந்திய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது இல்லை.

1947 வரையிலுமான ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, இப்போதைய இந்தியா என்ற அமைப்பு கிடையாது. தெற்கு இந்தியாவில், ஆந்திராவின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய ஹைதராபாத் நிஜாம் அரசு ஒரு தனி நாடுதான்; கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய மைசூரு சமஸ்தானம் ஒரு தனிநாடுதான்; கேரளத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு தனிநாடுதான். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம், 1947 வரையிலும் ஒரு தனி நாடுதான்.

வெள்ளைக்காரனின் துப்பாக்கியும், லத்திக் கம்புகளும்தான் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியது என்று, இந்தியக் குடிஅரசின் முன்னாள் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் பேசி இருக்கின்றார்கள். அந்த வரலாறு, ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; பல்வேறுபட்ட பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம்தான். இந்திய அரசு அமைப்புச் சட்டம் கூட, Union of India யூனியன் ஆஃப் இந்தியா, அதாவது இந்திய ஒன்றியம் என்றுதான் கூறுகின்றது.

அரசு அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்தில், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களின் முடிவில் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த அறிஞர்கள்தான், இந்தச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதி இருக்கின்றார்கள். அதுவும், ஆளுநருக்குத் தெரியவில்லை.

அந்த மாநாட்டில், காணொளி உரை ஆற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அருமையான விளக்கம் அளித்து இருக்கின்றார்.

புதிய கல்விக்கொள்கை என்பது, பிற்போக்குவாதம்; ஒன்றிய அரசு தனது பழமைவாதக் கருத்துகளை, பாடத்திட்டத்தின் வழியாக, மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது;

மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும்; மாநில அரசுகளின் கல்விக்கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்குவது மட்டும் பல்கலைக்கழகங்களின் கடமை அல்ல; அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக்கழகங்கள் பொறுப்பு ஆகும். எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும்;

இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, நிலையான தீர்வு என்பது, முன்பு மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து பறித்துக்கொண்ட கல்வியை, மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என அவர் பேசி இருக்கின்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 1960 களில் மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகளில், இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றார். நான் மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகளிலும், அந்தக் கருத்தையே வலியுறுத்திப் பேசி வருகின்றேன்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது ஒரு துணைக்கண்டம். பல்வேறு பழக்கவழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்த ஒன்றியம். எனவே, United State of Americas என்பது போல, இந்த நாட்டை, United State of Indias என்றுதான் அழைக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து பேசி இருக்கின்றேன். அதை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கின்றேன்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர். மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார் ஜெகதீப் தங்கர். 7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார்.

எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.03.2022

 

Tags : Vaiko reports that Governor Ravi should be removed from the charge of Vander of Universities

Share via