மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்கள் காலி!

by Editor / 20-05-2021 12:35:25pm
மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்கள் காலி!

மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனின் வலதுகரமாக விளங்கிய பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். அனைத்துப் பிரச்சினைகளும் கமலால் ஏற்பட்டன என்பதை அறிந்ததால், கட்சியில் நீடிக்க விரும்பாமல் விலகியதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இல்லாத நிலையில் வெற்றிடத்தை நிரப்பும் முடிவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் 2017ஆம் ஆண்டு தொடங்கினார். இரு கட்சிகளுக்கும் மாற்றாக தனது கட்சி இருக்கும், ஊழலுக்கு எதிராக, நேர்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கட்சி இயங்கும் என அறிவித்தார். மக்கள் நீதி மய்யத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இணைந்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. அதில் நகர்ப்புறத்தில் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றது. ஆனாலும், பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை. அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

மக்கள் நீதி மய்யத்தில் ஏராளமான இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளையும், குறிப்பாக திமுகவை அதிகம் விமர்சித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். திமுக, அதிமுக எனும் இரு கட்சிகளுக்கிடையேயான போட்டியில் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் நான்காவது இடத்தில் வாக்குகளைப் பெற்றாலும் தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். தலைவர் கமல்ஹாசனும் தோல்வியைத் தழுவினார். இதனால் மக்கள் நீதி மய்யத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசன் தலைமையில் ஜனநாயகம் இல்லை எனத் துணைத் தலைவரான மகேந்திரன் பேட்டி அளித்து விலகினார். துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள், களையே தன்னைக் களையெடுத்துக்கொண்டது என கமல் அறிக்கை விட்டார். இன்னும் பலர் தொடர்ந்து வெளியேறுவார்கள் என மகேந்திரன் கூறியிருந்தார்.

இதனிடையே கட்சி நிர்வாகிகளைப் பதவி விலக கமல் கட்டளையிட்டதை அடுத்து, அவர்கள் பதவி விலகினர். மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கியத் தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலகப் பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகினார். மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா விலகினார்.

அதன் பின்னர் நேற்று திருச்சி மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான முருகானந்தம் தனது ஆதரவாளர்களுடன் பதவி விலகினார். இந்நிலையில் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவரும், கமலின் வலதுகரமாக விளங்கியவருமான, பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவதும், கமல்ஹாசன் மவுனம் காப்பதும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது. இன்று கட்சியிலிருந்து விலகிய குமரவேல் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி விமர்சனம் வைத்தவர். பின்னர் கட்சியில் இணைந்த அவருக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருந்தது. கட்சியின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து விலகி வருவதால் கமல்ஹாசன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags :

Share via