கருப்பு பூஞ்சை நோய் தாக்கம்:  சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் அனுமதி

by Editor / 20-05-2021 04:56:56pm
 கருப்பு பூஞ்சை நோய் தாக்கம்:  சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் அனுமதி

 


கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கத்தால், சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்கள் 5 பேருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் சென்னையில் உள்ள பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை வாயிலாக இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. வெட்டு, தீக்காயங்கள் வாயிலாக தோலில் நுழையும் இந்த பூஞ்சை, பின் தோலின் மீது மேலும் பரவுகிறது.
அதீத சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.
இந்த நோய் கொரோனா தொற்றுடன் இருக்கும் போதும் அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பின்பும் தாக்கக்கூடியது. கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுதல் போன்றவை, இதற்கு அறிகுறிகளாக உள்ளன.இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தவறினால் கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.எந்தவித மருந்தையும் தன்னிச்சையாக எடுக்காமல் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags :

Share via