55 ஆயிரம் பூந்தொட்டிகளில் கண்ணை கவரும் மலர்கள்

by Staff / 12-05-2022 05:30:35pm
 55 ஆயிரம் பூந்தொட்டிகளில் கண்ணை கவரும் மலர்கள்

கோடை சீசன் சமயத்தில் வருபவர்களை மகிழ்விக்க ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.இங்கு நூற்றாண்டுகளை கடந்து மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்வார்கள்

கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த மலர் கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட உள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி வரும் 20ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனிடையே மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதமே மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா முழுவதும் 275 வகைகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதுதவிர மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

ஊட்டியில் கடந்த மாதம் அவ்வப்போது பெய்த மழை காரணமாக மலர் செடிகள் நன்கு வளர்ந்து மேரிகோல்டு, டேலியா உள்ளிட்ட அனைத்து வகை மலர்களும் பூத்து குலுங்குகின்றன.

இந்த நிலையில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணிகள் நடந்தது. இதனை கலெக்டர் அம்ரித், தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலாமேரி, உதவி இயங்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து மலர் காட்சி திடலில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ் மற்றும் புதிய ரகங்களான ஆர்னமென்டல்கேர், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், இன்காமேரி கோல்டு, பிகோனியா, கேன்டீப்ட், பென்டாஸ், பிரான்ஸ் மேரி கோல்டு, பேன்சி, பெட்டுன்யா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, டொரினியா உள்பட 200க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்ட 35 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் பல்வேறு வடிவங்களில் காட்சிபடுத்தப்பட உள்ளது. இதுதவிர ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via