அடேயப்பா தமிழகத்தில் 25 கோடி வசூலா?

by Editor / 25-05-2021 12:33:52pm
அடேயப்பா  தமிழகத்தில் 25 கோடி வசூலா?

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின் போது முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றாத 11,47,001 பேர் மீது இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனுடைய சங்கிலித் தொடரை உடைக்கவும் தமிழக அரசு கடந்த 10-ம் தேதி ஊரடங்கை நீட்டிக்கச் செய்தது. பின்னர் நேற்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 12,628 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வடக்கு, மத்திய, மேற்கு, தெற்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் மண்டலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீதான வழக்குப் பதிவு அதிகமாக உள்ளது. அங்கு முகக்கவம் அணியாத 3,109 பேர் மீது வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தனிமனித இடைவெளி, ஊரடங்கு விதிகளை பின்பற்றாத வழக்குகளை பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் அதிக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,011 பேர் மீது வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 3,042 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாத காரணத்தால் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 11.22 லட்சமாகும். அதேபோல் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் எண்ணிக்கை 51,115-ஆக உள்ளது. இவர்களிடமிருந்து மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதமாகவும் தனிமனித இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் காய்கறி, அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட தூரம் செல்லக்கூடாது. வெளியே செல்பவர்களுக்கு கட்டாயம் இ-பதிவு முறை பெற்றிருக்கவேண்டும். மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்பவர்களுக்கு மட்டும் இ பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via