மாவட்டச் செயலாளர்கள் மீது வந்துள்ள புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

by Editor / 28-05-2022 03:25:04pm
 மாவட்டச் செயலாளர்கள் மீது வந்துள்ள புகார்களின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின்  99-ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, கழக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். கழக இளைஞரணி – மாணவரணி – மகளிரணி – தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அமைப்புகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.  இவையெல்லாம் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும்,  கழக ஆட்சி அமைந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது மக்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்ற சொல் – தமிழ்நாட்டில் மட்டுமல்ல – மற்ற மாநிலங்களிலும் ,இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது என ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.  தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள் . சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். மாவட்டக் கழகச் செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். நீங்கள் அனைவரும்தானே கழகத் தொண்டர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ – சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா என ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களிடம் ஆவேசமாக கேட்டார். தொண்டன் உழைக்காமல்,  நிர்வாகி வேலை பார்க்காமல் யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால் ,அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

கட்சி தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்தி தான் வர வேண்டும் என ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் , பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்.  இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு செயல்பட வேண்டும் என பேசினார்.

கட்சித் தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களை, தகுதி வாய்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டு வாருங்கள். உட்கட்சி தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செய்த தவறுகள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது. தவறுகளைச் செய்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும்.தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளின் விசாரணைக்கு பிறகு  அவர்கள் மீது நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என பேசினார்.

இனி நடைபெறவிருக்கும் கழகத் தேர்தலை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும் என்பதில் தலைமைக் கழக நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கூறி தமது பேச்சை முடித்தார் ஸ்டாலின்


 

 மாவட்டச் செயலாளர்கள் மீது வந்துள்ள புகார்களின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
 

Tags : MK Stalin has warned that action will be taken on complaints against district secretaries.

Share via