புதுச்சேரியில் புதிய சட்டமன்ற  உறுப்பினர்கள் பதவியேற்றனர் 

by Editor / 26-05-2021 04:25:37pm
புதுச்சேரியில் புதிய சட்டமன்ற  உறுப்பினர்கள் பதவியேற்றனர் 


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் சட்ட உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது. இதனிடையே அவர் முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா  நடைபெற்றது.
முன்னதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தற்காலிக சட்டபேரவை தலைவராக பதவியேற்ற லட்சுமி நாராயணன், புதுச்சேரி சட்டப்பேரவைக்குச் சென்றார். அங்கு கொரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சபாநாயகர் தனி அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் ரங்கசாமி உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்களை தொடர்ந்து, 6 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள், 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், 6 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

Tags :

Share via