ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு  உணவு வழங்கியவர் கொரோனாவால் சாவு 

by Editor / 24-07-2021 07:03:42pm
ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு  உணவு வழங்கியவர் கொரோனாவால் சாவு 

 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது புதுவடவள்ளி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பள்ளிக் கல்வித்துறையில் அலுவலராக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதுவடவள்ளி கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் படையெடுப்பது வழக்கம்.

 
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமலிங்கத்தின் வீட்டின் எதிர்புறம் உள்ள காலியிடத்தில் இருக்கும் மரங்களில் குரங்குகள் முகாமிட்டு கிராம மக்கள் ஏதாவது உணவு தருவார்களா என ஏங்கித் தவித்து வந்தன. குரங்குகள் உணவுக்காக தவித்து வந்ததை கண்ட ராமலிங்கம் கடைகளில் வாழைப்பழம், கேரட் மற்றும் தின்பண்டங்களை வாங்கி குரங்குகளுக்கு கொடுத்து வந்தார்.


அன்புடன் உணவு கொடுக்கும் ராமலிங்கத்தை கண்டு குரங்குகள் பாசத்துடன் பழகி வந்ததோடு ராமலிங்கத்தின் அருகே வந்து அவரது தோல் மீது ஏறி அமர்ந்துகொண்டு உணவுகளை அன்புடன் வாங்கி சாப்பிடும். வனப்பகுதியில் வறட்சி நிலவும் காலங்களில் இந்த குரங்குகள் புதுவடவள்ளி கிராமத்தில் முகாமிட்டு ராமலிங்கம் தரும் உணவுகளை உண்டு மற்ற சீசன்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும். சுமார் ஆறு ஆண்டுகளாக ராமலிங்கம் குரங்குகளுக்கு உணவு கொடுத்து அன்புடன் பழகி வந்ததை அறிந்த கிராம மக்களும் அவரை பாராட்டினர். 


இந்த நிலையில் கடந்த வாரம் ராமலிங்கத்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு கொடுத்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொரோனாவுக்கு பலியான நிகழ்வு புதுவடவள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via