தடுப்பூசி விலையில்  முரண்பாடு ஏன்? மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் கேள்வி 

by Editor / 31-05-2021 04:07:08pm
தடுப்பூசி விலையில்  முரண்பாடு ஏன்? மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் கேள்வி 


தடுப்பூசி விலையில்  முரண்பாடு ஏன்? என்று மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.
நாட்டின் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், பைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் அனைவருக்கும் விரைவாகவே தடுப்பூசி செலுத்திவிடலாம் என்றது. 
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “45 வயது மேற்பட்டோருக்கு மத்திய அரசே 100% தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து விநியோகித்தது. ஆனால் 18 வயது முதல் 44 வயது கொண்டவர்களுக்கு வெறும் 50% தடுப்பூசிகளை மட்டுமே விநியோகிக்கிறது. எஞ்சிய 50 சதவீதத்தை தனியாருக்கும் மாநில அரசுகளுக்கும் ஒப்படைத்து விட்டது. மத்திய அரசு கொள்முதலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் தனியாருக்கும் மாநில அரசுகளுக்கும் வேறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முரண்பாடு ஏன்?
இதற்கு இணை நோயுடன் கூடிய 45 வயது மேற்பட்டோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவாகள் என மத்திய அரசு விளக்கமளிக்கலாம். ஆனால் கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக 44 வயதுக்கு குறைவவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவகிறது. அதுபோலவே பற்றாக்குறை தொடர்பாகவும் தொடர்ச்சியாகப் புகார்கள் வருகின்றன. இந்தக் குளறுபடிகளைக் களைந்து நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’’ என்றனர்.

 

Tags :

Share via