ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்

by Staff / 26-07-2022 04:15:41pm
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்

நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக சம்மனை அனுப்பி இருந்தது அமலாக்கத்துறை. அதைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றனர்.

ஏற்கனவே, இந்த வழக்கில் சோனியாகாந்தி ஆஜராகிய நிலையில், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, முதல் முறை ஆஜரான நிலையில், மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை கையில் எடுத்தது.


இந்நிலையில், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதும், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி ஆஜரானதுக்கும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணி சென்றனர். அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ராகுல்காந்தி, ரஞ்சீத் ரஞ்சன், கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், இம்ரான் பிரதாப்காரி, கே.சுரேஷ் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.


 

 

Tags :

Share via