பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை

by Editor / 29-07-2022 09:36:06pm
பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும்  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் இரண்டு மாநிலங்களும் கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே, அதேநேரம் பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
 
ஆனால் பல மாநிலங்கள் இது போன்ற பிரச்சினைகளால் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. ஆகவே தமிழக அரசு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக கவனிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “பல மாணவர்கள் குடும்ப கொரோனா சூழலில் வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகியது. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆசிரியர்கள் வட்டார வள ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதையும் நடப்பு கல்வி ஆண்டில் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

கொரோனா நோய் தொற்று காலத்தில் இந்திய அளவில் 250 மில்லியன் குழந்தைகள் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். தேசிய கல்விக் கொள்கையின் படி குழந்தைகள் இடைநிற்றலை தவிர்த்து பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் 100% பள்ளி செல்வதை 2030ஆம் ஆண்டுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகவே மத்திய அரசின் வழிகாட்டலின்படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நடத்தி, பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆனந்தி தலைமையிலான அமர்வு, ” இடைநின்ற குழந்தைகள் தொடர்பாக அரசு சமர்ப்பித்த புள்ளி விவரங்களில் வேறுபாடு உள்ளது. குழந்தை தொழிலாளர்களை மீட்கும் அதேசமயம் அவர்களின் குடும்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உண்மையில் குழந்தைகள் இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சனை. தமிழகம், கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே. ஆனால் பல மாநிலங்கள் இது போன்ற பிரச்சினைகளால் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. ஆகவே

தமிழக  அரசு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக கவனிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து, தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற குழந்தைகளின் புள்ளி விபரங்கள் தொடர்பாகவும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

 

Tags : Govt should take note of dropout of school children-High Court Madurai Branch

Share via