தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளது. கலால் வரி வசூல் ரூ.2,594.55 கோடியாக அதிகரித்துள்ளது.

by Editor / 29-08-2022 08:27:46pm
தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளது. கலால் வரி வசூல் ரூ.2,594.55 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கான மொத்த வருவாயில் 70 சதவீதம் அளவிற்கு மாநிலஅரசு விதிக்கும் வரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் மாநில அரசு வரி விதிப்பில் வரும் அனைத்து அம்சங்களில் வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

மதுபானம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்படும் கலால் வரி வசூல் கடந்த 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,199.23 கோடியாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் அதே காலகட்டத்தில் கலால் வரி வசூல் ரூ.2,594.55 கோடியாக அதிகரித்துள்ளது. 116.3 சதவீதம் அளவிற்கு கலால் வரி உயர்ந்துள்ளது.

இதேபோல் முத்திரைக்கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் 92.6 சதவீதம் அதிகரித்து, ரூ.4,457.95 கோடியாக உயர்ந்துள்ளது. நில வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் கால்பாகத்தில் 53.5 சதவீதம் உயர்ந்து, 58.46 கோடியாக அதிகரித்துள்ளது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி  கடந்த நிதியாண்டின் முதல் கால் பாகத்தில் ரூ.9,224.11 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் 2022-2023ம் நிதியாண்டில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி 48.4 சதவீதம் அதிகரித்து ரூ.13,692.84 கோடியாக உயர்ந்துள்ளது. மதிப்புக்கூட்டுவரி 38.3 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் கால்பாகத்தில் மதிப்புக்கூட்டு வரி வசூல் ரூ.13,199.24 கோடியாக அதிகரித்துள்ளது.

மாநில அரசின் மொத்த வரி வருவாய் 52.3 சதவீதம் அதிகரித்து ரூ.33,923.04 கோடியாக அதிகரித்துள்ளது. மாநில அரசின் வரி வருவாய், மத்திய வரி வருவாயில் மாநில அரசிற்கு கிடைக்கும் பங்கு, வரி இல்லாத வருமானங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவற்றை சேர்த்து தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் நடப்பு  நிதியாண்டின் முதல் கால்பாகத்தில் ரூ.57,768.55 கோடியாக உயர்ந்துள்ளது. 2022-23 நிதியாண்டின் முதல் கால்பாகத்தில் மத்திய வரிவிதிப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பங்கு, ரூ.5,823.78 கோடியாகும்.

தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் அதிகரித்துள்ளதால் அரசின் கடன் வாங்கும் அளவும் கடந்த காலாண்டில் குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை. வருவாய்ப் பற்றாக்குறையும் குறைந்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. நிதிப் பற்றாக்குறை ரூ.6,171.03 ஆகவும், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.2,166.24 கோடியாகவும் உள்ளது. இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புள்ளி விபரங்கள் தெரிய வந்துள்ளன.

வரி வருவாய் அதிகரிப்பு, மொத்த வருமானம் அதிகரிப்பு, கடன் அளவு குறைந்தது, நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை குறைந்தது என தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலை மேம்பட்டு வருவது குறித்து மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பழனிவேல் தியாகராஜன்,  தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் முன்னேறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறந்த வழிகாட்டுதலும் அவர் அளிக்கும் ஊக்கங்களுமே இது போன்று சிறப்பான செயல்பாடுகள் நிகழ்வதற்கு காரணம் என தமது டிவிட்டர் பக்கத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via