போலீசாருக்கு அப்டேட் அவசியம்! ரவுடிகளை கண்காணிக்க டி.ஜி.பி., உத்தரவு

by Editor / 07-09-2022 09:14:51am
போலீசாருக்கு அப்டேட் அவசியம்! ரவுடிகளை கண்காணிக்க டி.ஜி.பி., உத்தரவு

சென்னை : 'குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும், போலீசார் கண்காணிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, பிப்ரவரியில் மாநிலம் முழுதும், போலீசார் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 3,325 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, கத்தி உட்பட, 1,110 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அதன்பிறகும், அவ்வப்போது சோதனை நடத்தி, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலம் முழுதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளார். அவர்களில், சிறைகளில் இருப்போர், ஜாமினில் வெளியே வந்துள்ளோர் பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ரவுடிகளுக்கு தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும், போலீசார் தகவல்கள் திரட்டி வருகின்றனர்.

அத்துடன், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் வசிக்கும் ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் குறித்த விபரங்களை சேகரித்து, போலீசார், 'அப்டேட்'டில் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நபர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிப்பதும், போலீசாரின் அன்றாட பணிகளில் ஒன்றாக பின்பற்றப்பட வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வாய்மொழியாக நேற்று உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : Police need an update! DGP orders to monitor the raiders

Share via