“தொற்று இல்லாத தமிழ்நாட்டை  உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம்  காண நேரில் வருவேன்” - மு.க.ஸ்டாலின்

by Editor / 30-06-2021 07:48:13pm
 “தொற்று இல்லாத தமிழ்நாட்டை  உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம்  காண நேரில் வருவேன்” - மு.க.ஸ்டாலின்



முதல்வரும் திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் எழுதிய மடல் வருமாறு,
பத்தாண்டுகால இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனாம் ஞாயிறு வெளிச்சத்தில் தமிழ்நாடு ஒரு திங்கள் காலத்தைக் கடந்திருக்கும் நிலையில், அனைத்துத் தரப்பிலிருந்தும் கழக அரசுக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன. ஊடகங்கள் உண்மை நிலையை உரைக்கின்றன. கட்சி எல்லைகளைக் கடந்து கழக அரசு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்ற நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆட்சியின் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படும் சிறுசிறு விமர்சனங்களைக்கூட புறக்கணிக்காமலும், மாற்று ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டும் மக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று அதிகமாக இருந்த கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். பாதிப்புக்குள்ளானோருக்கு உரிய முறையில் விரைவான வகையில் சிகிச்சை கிடைத்திடவும், மற்றவர்கள் பாதிப்படையாத வகையில் தடுப்பூசி முகாம்களைக் கூடுதலாக்கியும், எளியோருக்கான உதவிகள் வழங்கியும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனும் பாதுகாக்கப்பட்டது.இந்த அரசு தனது பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது.
 அந்த வகையில் திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையினைத் திறந்து டெல்டா உழவர்களின் தாய்ப்பாலாக விளங்கும் காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறேன்.
கடைமடை வரை பணிகள் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, ஜூன் 12-ஆம் நாள் சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் - ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று அதன்பின் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.
‘கடமை’யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் - ‘கண்ணிய’மிக்க செயல்பாடு என்பது நீங்கள் ‘கட்டுப்பாடு’ காப்பதுதான். பேரிடர் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் விரைவில் மாறும். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்.இவ்வாறு மடலில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via