இயக்குநரும், நடிகரும், வசனகர்த்தாவுமான சித்து மாரடைப்பால் மரணம்.

by Staff / 15-09-2022 11:01:55am
இயக்குநரும், நடிகரும், வசனகர்த்தாவுமான சித்து மாரடைப்பால் மரணம்.

பிரபல இயக்குநரான கங்கை அமரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் சித்து (60). இவர் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் துணையாக இருந்துள்ளார். இதையடுத்து 1997ம் ஆண்டு விக்னேஷ், தேவயானி, கரண் ஆகியோர் நடிப்பில் வெளியான காதலி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து இயக்கிய ஒரு படம் பல்வேறு காரணங்களுக்காக இறுதி வரை வெளிவரவில்லை. பின்னர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ரோஜா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார். மேலும் முன்னணி இயக்குநர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். இதையடுத்து சித்துவின் உடலை அவரது சொந்த ஊருக்கு அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via