யாக சாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா – 30-ம் தேதி சூரசம்ஹாரம்.

by Editor / 25-10-2022 08:54:57am
யாக சாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா – 30-ம் தேதி சூரசம்ஹாரம்.

உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா நடைபெற்றது.இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும்,  அபிஷேகமும் நடைபெற்றது.பின்னர் 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து

காலை 7.30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கோயிலில் உள்பிரகாரத்தில் ஜெயந்திநாதருக்கு பூஜை தொடங்கி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 12.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, ஜெயந்தி நாதர் சண்முக விலாஷ் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். 

இன்று சூரியகிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறந்ததும், ஜெயந்தி நாதர் அபிஷேகங்களும், இரவு தங்கதேரில் கிரிவலமும் நடைபெறுகிறது. பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த முறை தங்கத்தேர் கிரிவலம் இருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாகசாலை பூஜை 29-ம் தேதி மாலை வரை, காலை – மாலை என இரு நேரமும் நடைபெறுவதோடு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. 

 

Tags : தொடங்கியது கந்த சஷ்டி விழா

Share via