4 ஐம்பொன் சிலைகள், பறிமுதல். 3 பேர் கைது.

by Staff / 29-10-2022 03:13:27pm
 4 ஐம்பொன் சிலைகள், பறிமுதல். 3 பேர் கைது.

ஆற்காடு சத்யா நகர், சேந்தனார் தெருவை சேர்ந்த வேலு மகன் பாலாஜி (39). தக்காளி வியாபாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து தக்காளி வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர். இவருடைய தக்காளி வேனில் டிரைவராக கன்னிக்கோயில் தெருவை சேர்ந்த மோகன் மகன் முரளிகிருஷ்ணன் (21) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம்(27. 10. 2022) நள்ளிரவு முரளி கிருஷ்ணனும், பாலாஜியும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் தலையில் ரத்த காயமடைந்த முரளிகிருஷ்ணன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். இதனை பார்த்த ஆற்காடு டவுன் போலீசார் முரளிதரனிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் ஐம்பொன் சிலை வைத்திருப்பது தொடர்பாக பாலாஜிக்கும், முரளி கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட ஏ. டி. எஸ். பி விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை டி. எஸ். பி பிரபு, ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் ‌ விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ஆற்காடு சத்யா நகரில் உள்ள பாலாஜியின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். சோதனையில் பூஜை அறையில் வைத்திருந்த 24 செ. மீ உயரமுள்ள முருகன் சிலை, 13 செ. மீ உயரமுள்ள மாரியம்மன் சிலை, 12. 5 செ. மீ உயரமுள்ள லட்சுமி சிலை, 10. 5 செ. மீ உயரமுள்ள காளி சிலை என 4 ஐம்பொன் சிலைகளையும், 2 சிறிய விநாயகர் சிலைகள் மற்றும் ‌ மெட்டல் டிடெக்டரையும் பறிமுதல் செய்து பாலாஜி, முரளி கிருஷ்ணன் மற்றும் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் மாவட்டம், காட்பாடி பாலாஜி நகர், 2-வது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்குமார் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா ஊரடங்கு காலத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை அருகே உள்ள ராமர் கோயில் பக்கத்தில் பாலாஜி ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வாங்கிய மெட்டல் டிடெக்டர்மூலம் பூமியை சோதனை செய்துள்ளார். சோதனையில் இந்த 4 ஐம்பொன் சிலைகளை, கண்டுபிடித்து தனது கூட்டாளிகளின் உதவியுடன் தனது வீட்டிற்கு சிலைகளை எடுத்து வந்து பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முரளி கிருஷ்ணனுக்கும், பாலாஜிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முரளி கிருஷ்ணன், பாலாஜியை போலீசிடம் போட்டுக் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பள்ளி அருகே உள்ள பழமை வாய்ந்த நாகம்மன் கோயிலில் புதையல் இருப்பதாக பரவிய வதந்தியை நம்பி மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒரு கும்பல் அம்மன் சிலையை சேதப்படுத்தி புதையலை தேடியது. அது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர். அந்த கும்பலுடன் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via