சோப்பு விற்பது போல் நடித்து பணம் மோசடி

by Staff / 19-11-2022 02:07:17pm
சோப்பு விற்பது போல் நடித்து பணம் மோசடி

ஈரோடு மாவட்டம் சித்தோடு மற்றும் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர். அதில் தங்களிடம் பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. சேலம், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் ஒரு தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.

சோப்பு விற்பது போல் வீடுகளுக்கு செல்லும் மர்ம நபர்கள் தனியாக இருக்கும் பெண்களிடம் இரண்டு சோப்பு ரூ. 50 -க்கு தருகிறோம். சோப்புடன் பரிசு கூப்பன் உள்ளது. கூப்பனில் என்ன பரிசு விழுகிறதோ அது உடனடியாக கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி பரிசுக்கு ஆசைப்பட்டு பெண்கள் சிலர் சோப்பு வாங்கி உள்ளனர். அப்போது சிலருக்கு குக்கர் , தோசைக்கல் பரிசாக விழுந்துள்ளது. இதை எடுத்து அந்தப் பெண்களிடம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ரூ. 100 கொடுத்து மற்றொரு பரிசு கூப்பன் வாங்கினால் மெகா பரிசு கிடைக்கும். அதில் மொபட், 7 பவுன் நெக்லஸ் ஆகியவை பரிசாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பெண்கள் கூப்பனை வாங்கி இருக்கிறார்கள்.

பின்னர் மோசடி கும்பல் கூப்பன் வாங்கிய பெண்களின் வங்கி கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றைப் பெற்று சென்றுள்ளனர். திடீரென ஒரு நாள் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு மொபட் பரிசு விழுந்துள்ளதாக கூறி ஏதாவது ஒரு ஷோரூம் முன்பு நின்று மொபட்டை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளனர். இதை உண்மை என்று நம்பும் பெண்களிடம் ஜிஎஸ்டி, டேக்ஸ் ரூ. 12 ஆயிரம் ஜிபே மூலம் செலுத்தினால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதை எடுத்து பரிசு விழுந்த மகிழ்ச்சியில் அந்த பெண்களும் மோசடி நபர்கள் சொல்லும் எண்ணுக்கு ஜிபி மூலம் பணத்தை அனுப்பி உள்ளனர். இதைப்போல் நெக்லஸ் பரிசு விழுந்ததாக கூறி ஒரு பவுனுக்கு ரூ. 2500 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று கூறி ரூ. 17, 500 அனுப்ப சொல்லி உள்ளனர். இதை உண்மை என்று நம்பி அவர்களும் பணத்தை செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை அடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். 

போலீசார் மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய என்னை தொடர்பு கொண்ட போது அது பண பரிமாற்றம் செய்யும் நிறுவனம் என்று தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது முக கவசம் அணிந்தபடி வந்தவர்கள் தங்களது உறவினர்கள் பணம் செலுத்துவார்கள் அதை எங்களிடம் கொடுங்கள் என்று கூறி வாங்கி சென்றது தெரியவந்தது. இதைப்போல் இந்த கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அந்த கும்பலைப் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via