மர்ம நபர்கள் திருடிய கார் எரிப்பு

by Staff / 20-11-2022 03:29:31pm
மர்ம நபர்கள் திருடிய கார் எரிப்பு

திருக்கழுக்குன்றத்தில், மாமல்லபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார், 41. இவரது வீடு, போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ளது. பழைய கார்கள் விற்கும் தொழில் செய்கிறார். வீட்டின் முன்புறம் விற்பனை அலுவலகம் உள்ளது.விற்பனைக்காக கார்களை சாலையோரம் நிறுத்தியிருந்தார். இங்குள்ள 'ஸ்விப்ட்' காரை வாங்க விரும்புவதாக, சிலர் அவ்வப்போது விசாரித்துள்ளனர்.செப். , 16 நள்ளிரவு மர்ம நபர்கள், அலுவலத்தில் புகுந்து சாவியை எடுத்து, ஸ்விப்ட் காரை திருடினர்.மற்றொரு காரையும் திருட முயற்சித்து, காரில் சாவியை பொருத்தியபோது, அலாரம் ஒலித்ததால், முதலில் திருடிய காரில் ஏறி தப்பினர்.இது குறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்து, மர்ம நபர்களை போலீசார் தேடினர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு அடுத்த மோசிவாக்கம் பகுதி ரயில் பாதை அருகே, எரிக்கப்பட்டிருந்த காரை சோதித்தனர்.காரில், சென்னை பகுதி ஆட்டோ பதிவெண் இருந்ததாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக ஆட்டோ பதிவெண்ணில் இயக்கப்பட்டதை அறிந்த போலீசார், காரின் சேஸ் எண் மூலம், திருடப்பட்ட கணேஷ்குமார் கார் என்பதை அறிந்து, அவருக்கு தகவல் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் போலீசார், திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்ததாகவும், அவர்கள் கணேஷ்குமாரிடம் தெரிவிக்காமல் அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.வேறு மாவட்ட போலீசார் மூலம் அறிந்த கார் உரிமையாளர், எரிந்த காரை பார்த்து, அப்பகுதியினரிடம் விசாரித்துள்ளார்.கால்நடை மேய்ப்பவர்கள், கடந்த 35 நாட்களுக்கும் மேலாக, அங்கேயே கார் கிடப்பதாக, அவரிடம் தெரிவித்துள்ளனர்.அதைத் தொடர்ந்து, அவர் போலீசாரிடம் அனுமதி பெற்று, தீக்கிரையான காரை, திருக்கழுக்குன்றம் கொண்டு வந்து, போலீஸ் நிலைய பகுதியில் வைத்தார்.மர்ம நபர்கள் திருடிய காரை, எதற்காக எரித்தனர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via