ஓபிஎஸ் தரப்புக்கு நவ.30க்குள் ஆவணங்களையும் தாக்கல் செய்ய அனுமதி

by Editor / 21-11-2022 05:43:42pm
ஓபிஎஸ் தரப்புக்கு நவ.30க்குள்  ஆவணங்களையும் தாக்கல் செய்ய அனுமதி

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை விசாரணையின்போது இபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது.

வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. மேலும், ஏற்கனவே ஒத்திவைக்கக்கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த சனிக்கிழமை பிற்பகல் தான் தங்களுக்கு விவரம் கிடைத்தது எனவே தான் ஒத்தி வைக்கக் கோருகிறோம் என்றும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

இபிஎஸ் தரப்போ, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், கட்சியின் அடிப்படை விதிகளில் கொண்டு வந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் உள்ளது எனவும், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இபிஎஸ் தரப்புக்குதான் ஆதரவு தந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொதுக்குழு வழக்கின் விசாரணை நவம்பர் 30க்கு ஒத்திவைத்தனர். ஒரு வார காலத்திற்குள் இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 30க்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தனர். தற்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் கைவிரித்துவிட்டனர்.

 

Tags :

Share via